Saturday, May 23, 2015

புறம்போக்கு என்கிற பொது உடமை - தமிழ்ப்பட அலசல்


S P ஜனநாதன் அவர்களின் நேர்முகத்தை "மதன் மேட்னி ஷோ" வில் காண நேர்ந்தது. அறிவு ஜீவிக்கான எந்த முஸ்தீபும் இல்லாத, பகட்டே இல்லாத ஒரு மனிதராய் தெரிந்தார் எனக்கு.

மிகவும் யோசித்து நமது மதன்: "நியூடனுக்கும் டெஸ்லாவுக்கும் நடந்த போட்டியில் நியூட்டன் குறுக்குவழியில் எல்லாம் முயற்சி செய்தும் தனது DC (Direct Current) மின்னிருக்கையை உபயோகப்படுத்த வைக்க முடியவில்லை" என்றும் "இறுதியில் டேஸ்லாவுக்குதான் அந்த விரைவாக சாகடிக்கும் AC (Alternating Current)மின்னிருக்கையை கண்டுபிடித்த பெருமை போய்ச்சேர்ந்தது" என்று சொல்ல, அதைப்பற்றி தெரியாது என்றும், நியூட்டன் கண்டுபிடித்த மின்னிருக்கைகூட பலமணி நேரம் எடுத்துக்கொண்டு, அவ்விடத்தில் அதைக்காண வந்தவர்கள் பிணவாடை தாங்காமல் மயங்கிவிழுந்த சம்பவம்பற்றி தான் கேள்விப்பட்டதாக அவர் பதிவு செய்தபோது, அவர் முகம் மிக சாதாரணமாக இருந்தது.

தனக்கு மதன் சொன்னது தெரியவில்லை என்றோ அல்லது தனக்கு வேறொரு விஷயம் தெரிந்திருக்கிறது என்றோ எந்த விகல்பமுமில்லாமல் மிக தெளிவாக தனக்கு தெரிந்ததை மிகச்சாதாரணமாக பகிர்ந்துகொண்டது அவரைப்பற்றி என்னை சிந்திக்க வைத்தது!

இவ்விடத்தில் ஆஸ்கர் அவார்டு வாங்கிய "Green Mile" (கிரீன் மைல்) என்ற படம் உங்களுக்கு நினைவுக்கு வந்திருக்கலாம்!





மேற்கண்ட படத்தை எடுத்து பகிர்ந்தமைக்கு ஒரு காரணம் இருக்கிறது. எனக்கென்னவோ ஒரு சாதாரண மனிதனுக்கு, நடிப்பையே கிட்டத்தட்ட வாழ்க்கையாக்கிகொண்ட மூவர் பணிவாய் இருப்பது போல நடித்து காட்டுவதாய் தோன்றியது!

பொதுவாக கதையை என் அலசலில் நான் சொல்வதில்லை. கதை தெரிந்துவிட்டால் படம் பார்க்கும் அவசியம் போய்விடுவதாய் நினைக்கிறேன்! ஒவ்வொரு படமும் ஒரு கதைசொல்லியின் தருணம். கதைச்சுருக்கம், மூலக்கதை, மூலமில்லாத கதை என்று எதையாவது தெரிந்துகொண்ட பிறகு படத்திற்கு போவானேன்?

என் அலசல்களில் என்னுடைய சுய பிரதாபங்களே தொக்கி நிற்கும்!

இவை என் நினைவுக்கூறுகள் ஆதலால்! அவ்வளவே அதன் நோக்கமுமாம்!

அமைதியான நடிப்பில் ஆர்யா கலக்கி இருக்கிறார்! மிடுக்கான மிக நேர்த்தியான இளம் சிறையதிகாரியாக ஷாம் - கொஞ்சம் கூட மிகாத நடிப்பு! தூக்கிலிடும் பணியாளராக விஜய் சேதுபதி!

மற்ற இரு நடிகர்களின் மிகையில்லாத நடிப்பை பாராட்ட வேண்டும் - ஆனால் அவர்களுக்கு அது இயக்குனரிடமிருந்து தொற்றியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்!

இயக்குனரின் சாயலே இல்லாமல் பாத்திரத்தை தானே உள்வாங்கி நடித்திருப்பது விஜய் சேதுபதிதான்! அவரின் பாத்திரத்தில்தான் மிகை சற்று தூக்கல்! சரக்குகூட போடாமல் தூக்கு மாட்டிக்கொள்ள காளி கோவிலுக்கு  வரும் அந்த பாத்திரத்தில் இயல்பாக நடிப்பது எளிதல்ல! அது கிட்டத்தட்ட பல நிமிடங்கள் ஓட வேண்டிய நிதானமான ஆழமான காட்சி! ஆனால் நம்ம ஊர் தியேட்டரில் ஒருவர் கூட உட்கார்ந்து பார்க்க மாட்டார்கள்!

ஆகையால் சிறிது மேலோட்டமாக தத்துபித்தென்று எடுத்திருந்தாலும் தன்னால் இயன்றவரை அந்த காட்சியில் அழகாக பண்ணி இருக்கிறார் விஜய்சேதுபதி! வாழ்த்துக்கள்!

"அவருக்கு ஒண்ணுமில்லை", "அவர விடுங்க" என்று புலம்பும் அந்த இடம் அருமை!

ஆழமான நடிப்புக்கு நிறைய நேரம் வேண்டி இருக்கிறது, அவ்வளவு நேரம் விஜய்சேதுபதியை திரையில் குளொஸப்பில் பார்க்க முடியுமாவென்று தெரியவில்லை! அது மாதிரி நிறைய கைதேர்ந்த நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்! கே பி அவர்களின் ஆழமான காட்சியமைப்பு போல! பின்னாட்களில் அந்த குளொசப் சீன் வந்தாலே காட்சியிலிருந்து நம்மை வெளியேற்றிவிடும் அளவிற்கு கே பி அதை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்!

ஆனால், அத்தகைய குளொசப் சீன்களுக்கு நிறைய ஸ்கோப் உள்ள இடங்கள் திரைக்கதையில் பற்பல! தேர்ந்த கலைஞர்கள் இல்லாததாலோ அல்லது இருப்பவர்களிடமிருந்து வேலை வாங்க முடியாததாலோ இயக்குனர் காமிராவை எந்த நடிகருக்குமருகில் அண்ட விடவேயில்லை!

அந்த பெண் பாத்திரத்தை எடுத்து விட்டு பார்த்தால் படம் மிகப்பிரமாதமாக ஒரு குருதிப்புனல் அளவிற்கு வந்திருக்குமோ என்று தோன்றுகிறது! இன்னும் வேகம்! இன்னும் மனப்போராட்டங்களின் டைட் குளொசப்பென்று பின்னி பெடலெடுத்திருக்கலாம்!!!

பணி முடியும் நேரம். பொதுவாக வீட்டிற்கு சென்றுதான் எனது கூட்டாளிகளின் தினநிகழ்வுகளை  தொலைபேசி வாயிலாக தெரிந்து கொள்வது வழக்கம். அன்று நேரமாகிவிட்டதால், நேரே என் கூட்டாளிகள் இருக்கும் SDB5 கட்டிடத்திற்கு நேரே சென்று விஷயங்களை தெரிந்துகொள்ளலாம் என்று அக்கட்டிட மின்தூக்கியில் ஏறினேன்.

எங்கிருந்தோ வந்த மூவர் என்னுடன் தொற்றிக்கொள்ள நாலாம் தளத்தை நோக்கி உயர்ந்தது மின்தூக்கி! அந்த யுவன் மற்ற இரு யுவதிகளிடம் "செம மொக்கை படம்மா, மொத்த படத்திலும் ஒரே ஒரு ஜோக்குதான்! விஜய்சேதுபதி வர்ற ஒரு சீன்லதான் காமெடி! செம வேஸ்ட் என்று வாயார புகழ்ந்து தள்ளிக்கொண்டிருதார்!".