மிக நவீன ரயில்பெட்டி, அதன் வெளிச்சம், எல்.இ.டி. தகட்டில் ஓடும் நிலைய அறிவுப்புகள், இவையவையும் தாண்டி வீல் வீல் என்று அலரும் அந்தக்குழந்தை. குழந்தை அழுதாலே மனம் பதறுகிறது. நாம் என்றோ எப்போதோ தனியாக பூட்டிய கதவிற்கு வெளியில் நின்று கதறிய கதறல் அது. அது ஒரு மனக்கீறல். மாறாவடு! முழுவதும் மூடிக்கொண்டு பயணிக்கும் தாய்மார்கள், அவர்களிடன் சென்று குழந்தையை வாங்க முடியாது. முகம் தெரிந்தாலே அது கடினம். எப்படியாவது அந்த குழந்தையை ஏந்திக்கொள்ளவேண்டும். விட்டலாச்சாரியார் படங்களில் வரும் கை போல என் கைகள் நீண்டு அந்தக்குழந்தையை ஆசுவாசப்படுத்த வேண்டும். இந்த பூவுலகில் அதற்கெல்லாம் வழியே இல்லை. என் மனைவி பக்கத்தில் இருந்து இருந்தால் - சும்மா மூடிக்கிட்டு உக்காரணும். புள்ள பெத்த அம்மாவுக்கு தெரியாதா என்று அதட்டி இருப்பாள் - அவள் அங்கு இல்லாமலும் கூட - அவளின் அதட்டலுக்கு உடல் அமர்ந்தது. ஒரு பெண்ணின் ஆளுமை அது. அவள் எல்லா இடங்களிலும் இருக்கவேண்டும் என்றில்லை. அவள் உயிரில் வான்காந்தத்தில் மனசாட்சியாக கலந்து ஒரு வாத்தியாரம்மா போல நம்மை அதட்டிக்கொண்டே இருக்கிறாள். ஒரு பாதி அம்மா, மீதி ஆம்படையாள். போதாக்குறைக்கு முதலாவதாக கிரகலக்ஷ்மியும் வாய்த்துவிட்டால் அந்த சம்சாரியின் கதி அவ்வளவே - சமுதாயம் கிழிக்கும் ஒழுக்க ரேகைகளை அவன் ஒருபோதும் பொது வாழ்க்கையில் தாண்டவே முடியாது. மீண்டும் மீண்டும் வீரிட்டு அழும் ஓசை காதை கிழிக்க, மனம் நிலை கொள்ளாமல் தவித்தது.
குழந்தையின் தலையில் ஒரு கை நன்றாக படியுமாறு வைத்து அரக்கு அரக்கு என்று அரக்கியது. எங்கிருந்து வந்தாள் இவள்? எப்போது ஏறினாள்? நிச்சயம் அவளை நான் பார்க்காமல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. குழந்தையின் அம்மா வேண்டாம் போதும் என்று சொல்லியும் தன் கையில் எழுந்த அன்புச்சூட்டை அந்த குட்டி கபாலத்துக்குள் ஏற்றாமல் விடப்போவதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டு தேய்த்துக்கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் அலறல் நின்றது. அதன்பின்தான் ஆசுவாசமாயிற்று. யார் இந்த தேவதை? நம் மனதின் நீட்சியா? எண்ணங்களுக்கு வலிமை உண்டு என்று ஆசான் சொன்னாரே? குழந்தையை கிட்ட தட்ட பிடுங்கி உச்சி மோந்து திருப்பி தாயிடம் தந்தாள். அந்தத்தாய் எதுவும் பேசாமல் நல்ல வேளையாக திருப்பிகொடுத்தாளே என்று வாங்கிக்கொண்டாள்.
அப்படியே அந்தக்குழந்தையை அந்த 'திடீர்' தேவதையிடமே கொடுத்துவிட்டால் கூட தன் ஆவியனைத்தையும் பேரம் பேசி அக்குழந்தையை வளர்த்திருப்பாள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வரவில்லை எனக்கு. இந்தப்பூவுலகில் இப்படி ஒரு தேவதையா?
அவள் ஒரு மோகினி. என் அய்யனைய்யப்பனையே பெற்றெடுத்த அர்த்தனாரி. அங்கிருந்து மாறி அருகில் இருந்தவர்களையும் ஆசிர்வதித்தாள். என் அருகில் வரும் முன்பே நான் பத்து ரூபாயை தேடி இல்லாமல், இருபது ரூபாயை எடுத்து வைத்திருந்தேன். எனக்கு மிக மிக அருகில் வந்து என் குருந்தாடியை பிடித்து செல்லம் கொஞ்சி, தன் கட்டைக்குரலில் "பார்த்து ஒரு மாசம் இருக்கும்" என்றாள் - யாரொ ஒரு புன்னியவான் நினைவாக. நான் லேசாக சிரித்துக்கொண்டே ரூபாயை கொடுக்க அதை தன் சுருக்குப்பையில் வைக்கும்பொது அவளின் தொப்புள் என் கண்களின் நேர்கொட்டுக்கு வந்து இடை மறித்தது. நான் அந்த பெரிய கருந்துளையை பார்த்துக்கொண்டே இருந்தேன்.
சர்வ நிச்சயமாக அவள் தேவலோக கன்னிகையோ அமானுஷ்ய மனுஷியோ இல்லவே இல்லை. யாரோ ஒரு மானுட தாய்க்கு பிறந்து கைவிடப்பட்ட மனுஷிதான் என்பதை அந்த கருந்துளை உறுதிப்படுத்தியது.