எங்கிருந்தோ வந்து,
நெருப்பு குளம்பாய் தகித்து -
நின்றவனை அணைத்து,
நீர்மம் எனும் பாலூட்டி,
இல்லாதிருந்தவனை இருத்தி முத்தி -
இன்றும் அணைத்தபடி அன்பு செய்யும் கடல் அன்னை!
காற்றிருக்கி கருவாக்கி -
நிர்ம திட உருவாக்கி,
ஊண் செதுக்கி,
உயிர் ஊட்டி,
தன்னுள் நீந்த விட்டு,
உரமேற்றி உலாப்போக -
கால் கொடுத்து, விலா கொடுத்து,
விண்ணோக்கி விர்ரென பறந்ததை பார்த்து எக்களித்து,
உனை ஆக்கி, எனை ஆக்கி,
ஓருயிரினின்று பல்லுயிர் ஓம்பும் கடல் அன்னை!
மாரி மாரி மழை எனும் தாய்ப்பால் பீய்ச்சி,
வற்றாத ஜீவநதி ஒட்டி,
வளர்த்த கடா மாரில் பாய்ந்த பின்னும்,
தன்னையே வாரி வாரி அபிஷேகம் செய்யும் -
தாயுள்ளம் மாறா கடல் அன்னை!
உப்பு உடம்பு என்பதாலோ என்னவோ,
ஓரிரு முறை சுனாமி தரிசனம்,
சுறாவளி, பெருமழை பினாமி தரிசனம்!
கற்புக்கரசியவள் எத்தனைதான் தாங்கிடுவாள்?
ஆர்ப்பரித்து அலை பேசும் மொழி தெரியா மானுடர்காள்,
மண்ணுக்கடியிலும், நம் சாம்பல் கரைக்கப்படும் நதியின் இறுதியிலும்,
நமக்காக காத்திருப்பாள், அரவணைத்து அருள் புரிவாள்.
தன்னிலிருந்து தெறித்த துமிதங்களுக்காய்
தனியே தவமிருக்கும் தெய்வமது,
மண்ணில் இருக்கும்வரை மறந்திடாமல்,
அவள் முந்தானை பற்றி நடந்திடுவோம்!
முழுவதுமாய் அவள் சொல்லை கேட்டிடுவோம்!
நச்சில்லா உலகமதை நாம் படைப்போம்!!!