Sunday, December 5, 2010

நச்சில்லா உலகமதை நாம் படைப்போம்!!!

எங்கிருந்தோ வந்து,
நெருப்பு குளம்பாய் தகித்து -
நின்றவனை அணைத்து,
நீர்மம் எனும் பாலூட்டி,
இல்லாதிருந்தவனை இருத்தி முத்தி -
இன்றும் அணைத்தபடி அன்பு செய்யும் கடல் அன்னை!

காற்றிருக்கி கருவாக்கி -
நிர்ம திட உருவாக்கி,
ஊண் செதுக்கி,
உயிர் ஊட்டி,
தன்னுள் நீந்த விட்டு,
உரமேற்றி உலாப்போக -
கால் கொடுத்து, விலா கொடுத்து,
விண்ணோக்கி விர்ரென பறந்ததை பார்த்து எக்களித்து,
உனை ஆக்கி, எனை ஆக்கி,
ருயிரினின்று பல்லுயிர் ஓம்பும் கடல் அன்னை!

மாரி மாரி மழை எனும் தாய்ப்பால் பீய்ச்சி,
வற்றாத ஜீவநதி ஒட்டி,
வளர்த்த கடா மாரில் பாய்ந்த பின்னும்,
தன்னையே வாரி வாரி அபிஷேகம் செய்யும் -
தாயுள்ளம் மாறா கடல் அன்னை!

உப்பு உடம்பு என்பதாலோ என்னவோ,
ஓரிரு முறை சுனாமி தரிசனம்,
சுறாவளி, பெருமழை பினாமி தரிசனம்!
கற்புக்கரசியவள் எத்தனைதான் தாங்கிடுவாள்?

ஆர்ப்பரித்து அலை பேசும் மொழி தெரியா மானுடர்காள்,
மண்ணுக்கடியிலும், நம் சாம்பல் கரைக்கப்படும் நதியின் இறுதியிலும்,
நமக்காக காத்திருப்பாள், அரவணைத்து அருள் புரிவாள்.

தன்னிலிருந்து தெறித்த துமிதங்களுக்காய்
தனியே தவமிருக்கும் தெய்வமது,
மண்ணில் இருக்கும்வரை மறந்திடாமல்,
அவள் முந்தானை பற்றி நடந்திடுவோம்!
முழுவதுமாய் அவள் சொல்லை கேட்டிடுவோம்!
நச்சில்லா உலகமதை நாம் படைப்போம்!!!

2 comments:

Pillai Arumughom said...

நல்ல கவிதை. அணு உலை நச்சுக் கழிவுகளை அதிகம் கடலில் கொட்டுவது, நகரச் சாக்கடையைச் வேதியியல் முறையில் சுத்தப்படுத்தாமலேயே கடலில் சேர்ப்பது, அளவுக்கதிகமாக மீன்பிடிப்பது எனக் கடலுக்குத் தீங்கு விளைக்கும் செயல்களை அனைத்து அரசுகளும் மேற்கொள்கின்றன. கடலைக் காப்பாற்ற வேண்டிய அவசியத்தை இக்கவிதை உணர்த்துகிறது. கவிதா உணர்ச்சி தெறிக்கும் இப்படைப்புக்காக உங்களைப் பாராட்டுகிறேன். இலக்கியப் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

Nainar The Blogger said...

மிக்க நன்றி சித்தப்பா! இக்கவிதையை என்னுடைய நிறுவனத்தில் நடைபெறும் ArcLights கலைவிழாவிற்கு அனுப்பி இருந்தேன்! அவர்கள் இந்த கவிதையை தேர்வு செய்திருக்கிறார்கள்!
இன்று இக்கவிதையை நான் மேடையில் வாசிக்கவிருக்கிறேன்! இதுதான் முதன் முதலில் மேடை ஏறும் எனது கவிதை!

தங்கள் ஆசிர்வாதம் மற்றும் வழிகாட்டுதல் மற்றும் சீர்மிகு கலந்தாய்வுகளுக்கு மிக்க நன்றி!