Saturday, November 27, 2010

நந்தலாலா - மிஷ்கின் - இளையராஜா


நந்தலாலா - மிஷ்கின் - இளையராஜா

சுவரொட்டிகளில் இருந்த தனிமை என்னை ஈர்த்தது என்று நினைக்கிறேன். மிலிட்டரி உடையுடன் கூடிய மிஷ்கின் மற்றும் ஒரு சிறுவன் தெரிந்ததாய் ஒரு ஞாபகம். அது தவிர வேறு எதுவும் நினைவில் இல்லை. ரத்த சரிதம் போகலாம் என்று முடிவாகி புதன் இரவு இருக்கை முன்பதிவு செய்ய எத்தனிக்கையில் அப்படம் வரவில்லை என்பதும் அதற்கு மாறாக நந்தலாலா பதிவு செய்ய வேண்டி விட்டதாகவும் நண்பன் தெரிவித்தான்.

ஒவ்வொரு காட்சியிலும் மிக மிக மெதுவாக நகர்கிறது கதை. இதை ஒரு பயண கதையாக கொள்ளலாம். கதை மாந்தர்களோடு சேர்ந்து கதையும் நாமும் பயணிக்கிறோம். முதல் காட்சியிலேயே நம்மை நெளிய வைத்து விடுகிறார் இயக்குனர். இரண்டாம் காட்சி நேர் எதிர் மாறாக அதிரடியோடு துவங்கி மிக சாதாரணத்திற்கு சடாலென தாவி மிஷ்கினை முதல் முதலாக நமக்கு அறிமுகபடுத்துகிறது. முதல் காட்சியில் நெளிய வைத்ததன் நோக்கம் போக போக தெளிவாகிறது. மிஷ்கின் ஆர்ட் பிலிம் எடுத்திருக்கிறாராம் :-). பார்த்து மிஷ்கின் ஆர்ட் பிலிம் அறிமுகமாகாதவன் பார்த்தால் நிரம்பவே நெளிய வேண்டியதாகிவிடும். இதற்கு முன் ஆர்ட் பிலிம் பழகியவர்களுக்கு அதீத நெளிய வைக்கும் இடைவெளியை மன்னிக்கும் பக்குவம் இருப்பதாக கொண்டால், படத்தை ரசிக்கலாம்.

இப்படி தாறுமாறாக கதைப்பதன் நோக்கம் - இதையும் தாண்டி இப்படம் தமிழுக்கு புதியது என்பதை நீங்கள் படம் பார்க்கும்போது உணர்வீர்கள் என்ற நல்ல எண்ணம் தான்.

முக்கி முக்கி அழுதேன். ஆனால் என்னை வைத்து படத்தை எடை போட வேண்டாம். நீங்களே ஒரு முறை அழுது பார்த்து கொள்ளுங்கள். இடைவேளையில் நண்பன் ஞாபகமாய் கொண்டு வந்து கொடுத்த பேப்பர் நாப்கினை பத்திரபடுத்தி படம் முடிந்து பெயர் ஓடும் போது முடிந்த வரை அழுத்தி கண்களை துடைத்து விட்டு லேசான புன்னகையுடன் ரெஸ்ட் ரூம் சென்ற பிறகுதான் முந்தின நாள் நான் தூங்காததை ஞாபகப்படுத்தியது என் பேயறைந்த முகம். அழுதது உண்மை தான், அனாலும் என் முகம் இப்படி வீங்கும் அளவுக்கு நான் அழுதிருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன்! இயக்குனரின் உதவியாளர் யாராவது பார்வையாளர்கள் ரெஸ்பான்ஸ் பார்க்க வந்திருந்தால் என் முகத்தை பார்த்த மாத்திரத்தில் திருப்தி பட்டிருப்பார்! உலவும் புகைப்பட கருவி மூலம் நகல் எடுத்து மிஷ்கினுக்கு மின்னஞ்சல் கூட அனுப்பி இருக்கலாம்!

ரேணுகாவின் முகம், கொஞ்சம் அகலமான பின்புறம், இரண்டும் கதையின் கற்பனை உலகத்தை கலைப்பதை என் நண்பன் பகிர்ந்து கொண்டான். எனக்கும் அப்படியே தோன்றுகிறது. கத்தாழை கண்ணழகி கலக்கி விட்டார். அவரை நண்பன் தான் அடையாளம் சொன்னான். அவனும் கூட பத்திரிக்கையில் படித்திருக்க வேண்டும். பாழடைந்த மொட்டை வீட்டின் சுவருக்குள்ளே அந்த புடவை ஒட்டவில்லை. கொஞ்சம் பாமரத்தனம், தெளிவில்லாத பணக்குறி பேச்சு, இவை இல்லாமல், தெளிவாக பேசவும் முடியுமோ பரத்தைகளால்? அனால் ஒன்று நிச்சயம் தெளிந்த மனத்தை கொண்டு தான் பரத்தையின் கதை சொல்ல முடியும். கதை சொல்ல மட்டுமே கத்தாழை கண்ணழகி. பாத்திரமாக மாற நல்ல நடிகை தேவை. இவர் நிறைய முயன்றிருக்கிறார்! நிச்சயமாக! ஒருவேளை அனுபவம் கற்று கொடுத்த தெளிவோ? ஆக மொத்தம் பாதி திரைப்படம் தான் திரையில் மீதி முழுவதும் மனத்திரையில் தான்.

உதாரணமாக, தன் தாயை முத்தம் கொடுக்க கிளம்பும் சிறுவன், தன் தாயை அறைய நினைக்கும் மிஷ்கின், இறுதியில் உணர்ச்சி மாறிப்போக, தாயை கைவிடும் சிறுவன், கட்டி அணைத்து முத்தம் கொடுக்கும் மிஷ்கின், இப்படி நாமே நிறைய கோர்த்து புரிந்து ரசித்து கொள்ளலாம். மற்றுமோர் உதாரணம், போதிய அறிவு இல்லாத மிஷ்கின் பாத்திரம் தன் தாயை ஒரு மன நல காப்பகத்தில் கொண்டுபோய் செர்ப்பதெப்படி என்பதற்கு பதில், கூட இருந்த அந்த பெண் சொல்லி இருக்க கூடும் அல்லது அருகாமையில் அது ஒன்றுதான் இருந்து இருக்கும், அல்லது மணி அடித்தால் சோறு, உறங்க மாத்திரை கிடைக்கும் என்ற சொந்த அனுபவம் இப்படி எதுவேண்டுமானாலும் கற்பனை செய்து கொள்ளலாம். பாதி தான் திரையில், மீதி நம் மனத்திரையில் தான்.

ட்ரக்டர் பெண், ஓடி வந்து மார்பில் லேசாக குத்தி அழுவதற்கு பதிலாக, கன்னத்தை தடவி, தான் அறைந்த அறைக்கு ஒரு மன்னிப்பு வேண்டும் முகத்தோடு சென்றிருக்கலாம்!

சட்டென்று நின்று வெறித்து பிறகு காட்சியை நமக்கு விவரிக்கும் படக்கருவி, வசனமே இல்லாத காட்சி அமைப்புகள், தமிழ் திரைப்படத்தின் மயில் கற்கள்.

பெரும் நடிகர்கள் நடிக்க மறுத்து(யார் அந்த பெரிய நடிகர்கள்? உங்கள்ளுக்கு தெரியுமா? நான் பத்திரிகை நிறைய படிப்பது இல்லை), அந்த சுமையை தானே ஏற்று, ஒதுக்க முடியாத வகையில் நடித்திருக்கும் மிஷ்கினை பாராட்டாமல் இருக்க முடியாது.

ஒரு நடிகனின் பங்களிப்பையும் அதன் முக்கியத்தையும் நமக்கு உணர்த்துகிறது நந்தலாலா, மந்திர புன்னகை போன்ற நடிக-இயக்குனர்களின் ஒரு சில படங்கள். சேரன் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருந்தாலும் அவர் இயக்கிய படங்களின் சீர்மை அவர் நடித்த படங்களில் இல்லை என்றே தோன்றுகிறது.

மிஷ்கினை இந்த வரிசையில் என்னால் சேர்க்க முடியவில்லை. வேறு வழி இல்லாமல் ஏற்றுக்கொண்டு முடிந்த வரையில் செம்மையாக செய்ய வேண்டும் என்ற வெறி தெரிந்தது.

முதலில் சத்தமே இல்லாமல் நகர்கிறது கதை. இளையராஜாவை தேட வைத்து விட்டார்கள். படத்தின் ரஷ் பார்த்து விட்டு அப்படியே விட்டு விடலாம் என்று யோசித்திருப்பாரோ என்னவோ ஒரு சில இடங்களை தவிர இசையை இம்மியும் காணோம். இளையராஜாவை இன்னும் பாட சொல்லி வற்புறத்த வேண்டாம் ப்ளீஸ்.

சட்டென பல இடங்களில் சிரிப்பலை. யோசிப்பதற்கு நிறைய இடைவெளி. நிறுத்தி நிதானமாக நகரும் படம். குதி சோளம் வாங்கி தின்று முடிப்பதற்குள் படம் முடிந்து போகிறது. இரண்டரை மணி நேரத்திற்கு குறைவில்லை. எப்படி போனதோ தெரியவில்லை.

படத்தின் இறுதி காட்சி. "இப்படி படம் எடுத்தால் பலூன் தான் விற்க வேண்டும்" என்று நண்பர்களோடு வந்து உற்சாகத்திற்கு பதில் கண்னீரை வரவழைத்த இயக்குனரை 'பாராட்டி' தன் நண்பர்களுக்கு மத்தியில் தன்னை நிலைநாட்டிகொள்ள முயற்சித்தது ஒரு அசடு. பெரிதாக ரெஸ்பான்ஸ் இல்லாமல் போகவே வழிந்திருக்க வேண்டும்.

'எ' மையங்களில் ஓடிவிடும். 'பி' மற்றும் 'சி' யில் கொஞ்சம் சிக்கல் தான்.